Saturday, December 16, 2017

அனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்டுநிறுவனம்

சென்னையில் ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை கி.பி.2004 ஆம் ஆண்டில் நிறுவி,அனாதையாக இறப்பவர்களின் உடலை உரிய மரியாதையோடு ஈமச்சடங்கு செய்து வைக்கின்றனர்.இப்படிச் செய்வதும் புண்ணிய காரியங்களில் தலைசிறந்தது ஆகும்.
இவ்விதம் புறக்கணிக்கப்பட்ட சடலங்களுக்கு அந்திமக்கிரியைகளைச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு என்பதை தர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
இப்படிச் செய்வது பத்து அஸ்வமேத யாகப்பலன்களுக்கான பலன்களை இது அளிக்கும் என நமது முன்னோர்களாகிய ரிஷிகள் அருளியுள்ளனர்.
“அனாத பிரேத சம்ஸ்காராத் தச அஸ்வமேத பலம் லபேத்”
இதற்காக காஞ்சி ஸ்ரீபூஜ்யஸ்ரீ மகாப்பெரியவரின் அருள் கட்டளையினால் ஆரம்பிக்கப்பட்டு,தமிழக அரசு காவல்துறையினரின் அனுமதியோடும்,ஒத்துழைப்போடும் செயல்பட்டுவருகிறது.
இப்படி அனாதைச்சடலங்களுக்கு அந்திமச்சடங்குகள் செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆத்மா உரிய புண்ணிய உலகத்தை அடையும்.இப்படி அனாதையாக இறப்பவர்களில் சிறு குழந்தைகள்,சிசுக்கள்,நடுத்தர வயதினர்,வயோதிகர்கள் என எல்லா வயதினரும் அடங்குவர்.
ஒவ்வொரு அந்திமக்கிரியைக்கும் கி.பி.2007 ஆம் ஆண்டில் ரூ.750/- செலவாகிறது.இந்தப் புண்ணியக்காரியத்துக்கு,அன்பளிப்பு வழங்கிட விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரி,செல் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
திரு.எம்.வி.ரமணி,மானேஜிங் டிரஸ்ட்,
செல்:98410 12779,98410 115322
திரு.ஆர்.சுப்பிரமணியன்,சேர்மன்,ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட்,பழைய எண்:41,புது எண்:42,சுப்பிரமணியன் தெரு,மேற்கு மாம்பலம்,சென்னை-33.
செல்:98409 22614.

யார் இந்த ஹரி

Image may contain: 5 people, people smiling, people standing and outdoor

கலைந்த தலை
செருப்பில்லாத கால்கள்.
அழுக்கு வேட்டி, சட்டை, வெள்ளந்தியான தோற்றம். இதுதான் ஹரியின் அடையாளம்.

மதுரை தத்தநேரி மயானத்தில் பிணங்களை எரிக்கவும், புதைக்கவும் செய்யக் கூடிய மயான உதவியாளராக பணியாற்றுபவர்.

தாய்,தந்தையை இழந்த நிலையில் வறுமையும், வாழ்க்கையும் விரட்ட இவர் 12 வயதில் தஞ்சம் அடைந்த இடம்தான் மதுரை தத்தநேரி மயானமாகும்.
பசிக்காக நேர்மையான எந்த வேலையும் செய்யத் தயராக இருந்த ஹரிக்கு அங்கிருந்த வெட்டியான் எனப்படும் மயான உதவியாளர்களின் உதவியாளாக இருக்கும் வேலை கிடைத்தது. வேலை கிடைத்தது என்பதோடு நேர, நேரத்திற்கு சாப்பாடு கிடைத்தது.
மயானம் இவருக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது, அதில் முக்கியமானது எதற்கும் ஆசைப்படாதே என்பதுதான்.
இதன் காரணமாக இவர் படிப்படியாக வளர்ந்து மயான உதவியாளராக மாறி கிட்டத்தட்ட நாற்பது வருட காலமாக இந்த வேலையை செய்த போதும், தனக்கு என்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் தன் தேவைக்கு மேல் வருவது அனைத்தையும் சேவைக்காக செலவிட்டு வருகிறார்.
ஏழை மாணவ, மாணவியரை படிக்க வைப்பது, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கட்டில் வாங்கிக் கொடுப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுப்பது, பார்வையற்றவர்களுக்கு ஊன்று கோல் வழங்குவது என்று ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார். கையில் கொஞ்சம் காசு இருந்துவிட்டால் தகுதியான ஆளை தேடிப் பிடித்து அவர்களுக்கு உதவி செய்ய இவர் கிளம்பி விடுவார்.
இதுவரை 2 லட்சத்து 88 ஆயிரம் சடலங்களை எரித்தும், புதைத்தும் உள்ளார். இதில் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற சடலங்களுக்கு இவரே உற்றமும், நட்புமாக இருந்து இறுதிச் சடங்கினை செய்துள்ளார்.
இந்த விஷயங்களை எல்லாம் கேள்விப்பட்டதன் அடிப்படையில்தான் அவருக்கு விருது வழங்கப்பட்டது. சுதேசி நிர்வாக ஆசிரியர் பத்மினி ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் ஹண்டே, முன்னாள் போலீஸ் கமிஷனர் நந்தபாலன் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து வழங்கிய விருதினை வாங்கும்போது எழுந்த கைதட்டலின் சத்தத்தில் அரங்கம் அதிர்ந்தது.
எவ்வளவோ பேரின் சடலங்களை எரித்தும், புதைத்தும் வரும் ஹரியின் விருப்பம் என்ன தெரியுமா? தன் மரணத்திற்கு பிறகு தனது உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது மாறாக மருத்துவ கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு உதவியாக தனது உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கிவிட வேண்டும் என்பதுதான்.

மனித வடிவில் மருத்துவ கடவுள்கள்

Image may contain: 10 people, people smiling, people standing

ஏழை மக்களுக்காக, இலவசச் சேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் ஏழு மருத்துவர்களின் உன்னத சேவை ‘வலியில்லா வாழ்வு’
மதுரை கடச்சனேந்தலில் ஏழு பேரைக் கொண்ட மருத்துவக்குழு ‘ஐஸ்வர்யம் அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் தொடங்கி மருத்துவ சேவையை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் நிர்வாகிதான் பாலகுருசாமி. அமுத நிலவன், சபரி மணிகண்டன், வித்யா மஞ்சுநாத், அறுவை சிகிச்சை நிபுணர் அருண் குமார், பிசியோ தெரப்பிஸ்ட் ரம்யா, நரம்பியல் நிபுணர் வெங்கடேஷ் ஆகியோர் இதன் முக்கிய தூண்கள்.
7 மருத்துவர்கள் அடங்கிய ஐஸ்வர்யம் குழு
‘‘குணப்படுத்த முடியாத நோய் தாக்கத்தில் இருப்பவர்கள், இறக்கும் தருவாயில் இருக்கும் யாரும் வலியுடன் மரணிக்கக் கூடாது என்பது எங்கள் நோக்கம்,’’
என்கிறார் டாக்டர் பாலகுரு. ‘‘உலகில் பல நாடுகளில் ‘பெயின் ரெஸ்கியூ சென்டர்’ என்று தனியாக மருத்துவ முறையே உள்ளது. இந்தியாவில் இது மிகவும் குறைவு. தமிழகத்தில் சென்னையில் உள்ளது. ஆனால் அது பணம் பெற்று இயங்கும் தனியார் மருத்துவ மையமாகும்.
ஏழு டாக்டர்கள் ஒன்றிணைந்து இந்த இலவசச் சேவையை துவங்கினோம். நான், அமுதநிலவன், சபரி மணிகண்டன், மூவரும் ஒன்றாக மருத்துவக் கல்லூரியில் பயின்றோம். படிக்கும் போதே பல ஊர்களுக்கு சென்று இலவச மருத்துவம் செய்வோம். மருத்துவம் படித்து கொண்டு இருக்கும் போது அமுதநிலவனின் தாயார் புற்று நோய் வந்து இறந்தார். அதுவும் தாங்க முடியாத வேதனையிலும் வலியிலும் பல மாதங்கள் துடித்து மரணித்தார். இப்போது நினைத்தாலும் எங்களால் அந்த வலியை உணர முடிகிறது.
அன்றிலிருந்து வலியுடன் இறக்கும் தருவாயில் இருப்பவர்களை தேடிச்சென்று அவர்களின் வீடுகளில் சிகிச்சை தந்து வருகிறோம்.
ஒரு முறை நண்பர் சபரி மணிகண்டன்.. பார்வையும் சுயநினைவும் இழந்த வயதான மூதாட்டி ஒருவரைச் சொந்த மகனே சாலையில் கொண்டுவந்து விட்டுச் சென்றதைப் பார்த்து, அவரை மீட்டு அவருக்கு சிகிச்சை தந்தார். அடுத்து உடல் முழுவதும் புண் வந்து சீழ் பிடித்த முதியவர் ஒருவரை சந்தித்தோம். இது மாதிரியான பல நிகழ்வுகள் எங்களை பாதித்தது.
ஆரம்பத்தில் கிராமங்கள்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தினோம். முகாமுக்குக்கூட வர முடியாத நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்களையும் தேடிப்போய் சிகிச்சை கொடுத்தோம்.
முன்பு பள்ளியாக இயங்கிவந்த ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மருத்துவமனையாக்கி நடத்தி வருகிறார்கள். தற்போது நோய் முற்றிய நிலையில் 20 பேர் உள்ளனர். “வலிக்குறைப்பு சிகிச்சை செய்து, இறுதி காலம் வரையில் அவர்களைப் பராமரிப்போம். எதற்கும் பணம் வசூலிப்பதில்லை. எங்கள் சேவையை உணர்ந்து, தேவையான பொருட்களை சிலர் வாங்கித்தந்து விடுகிறார்கள். கிடைக்காத பொருட்களை நாங்களே வாங்கிக்கொள்கிறோம்.
பெரும்பாலான நோயாளிகள் படுத்த படுக்கையாக இருப்பதால், ‘டயாப்பர்’ காட்டன்கள் தான் அதிகளவில் தேவைப்படுகின்றன, என்கிறார்கள்.
வளர்ந்த குழந்தைகள் தான் முதியவர்கள். முதுமை அடைந்த பின் அவர்களின் ஆசைகள் கனவுகள் எல்லாம் நிம்மதியான மரணம் வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டு இருக்கும். முதுமைக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மிக சிலரே..
"மருத்துவத்துக்குப் படித்தது சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல என்பதையுணர்ந்த மருத்துவர்கள் கூட்டாக இணைந்து நடத்துகிறோம் தினமும் ஒரு மருத்துவர் வீதம் சுழற்சி முறையில் வந்து நோயாளிகளைப் பார்க்கிறோம்,” என்றனர்.
இரவும் பகலும் செவிலியர்களும் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் அருண்குமார். தம்மை மருத்துவர்களாக்கிய இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த இளம் மருத்துவர்களின் கூட்டமைப்பு தான் சார் இது.
ஒருகட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பத்து படுக்கைகளை வைத்து மூன்று பொது மருத்துவர்கள், சக்கரை இருதய மருத்துவர், எலும்பு மற்றும் நரம்பியல் மருத்துவர், மனநல மருத்துவர், பிசியோதெரப்பிஸ்ட் என சேர்ந்து எங்களுக்குள் வரக்கூடிய ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினோம்.
வயதாகி நோய்வாய்ப்பட்டு குணப்படுத்த முடியாமல் இருக்கும் மனிதர்கள், வாழ்க்கையோட கடைசி அத்தியாத்தில் இருப்பவர்கள், சாலையோர முதியவர்கள் என நாங்களே தேடிச்செல்கின்றோம். சிலரை வலியில் இருந்து குணப்படுத்தி அவர்களின் வீட்டுக்கு அனுப்புகின்றோம்.
”ஆதரவற்று இறப்பவர்களை நாங்களே மயானத்தில் மகன்களாக இருந்து இறுதி மரியாதையை செய்கிறோம்,” என்கிறார் டாக்டர் வித்யா மஞ்சு.
தொடர்ந்து பேசிய அமுதநிலவன், ‘‘இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் வலியால் துடிதுடித்துச் சாகிறார்கள். அதுவும் தாள முடியாத மரண வலியால். புற்றுநோய், சிறுநீரக முடக்கம், எச்.ஐ.வி. பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி நாட்களை அருகிலிருந்து பார்த்தவர்களுக்கு இந்தக் கொடுமை கொஞ்சம் புரிந்திருக்கும்.அது
தாளமுடியாத வலி.. மரண வலி!
பெரும்பான்மையானவர்கள் ஏழைகள். ஒரு கட்டிலுக்கோ, ஒற்றை ‘பாரசிட்டமால்’ மாத்திரைக்கோ வழியில்லாதவர்கள். மலஜலத்தைச் சுத்தம் செய்யக் கூட ஆளில்லாமல், ஒரு விலங்கைப் போலக் கிடப்பவர்கள். அதில் சிலர் ஊனமுற்றோராகவும், பார்வையற்றோராகவும் இருப்பது இன்னும் கொடுமை.
தற்ப்போது இருக்கும் இடத்தில் மொத்தம் நான்கு அறைகள். அதில் மூன்று அறைகளில் படுக்கைகள். ஓர் அறை செவிலியர் நிலையம் மற்றும் சமையலறையாக மாற்றப்பட்டிருந்தது. மருத்துவருக்கெனத் தனி அறை இல்லாததால், நோயாளிகள் படுத்திருக்கும் ஒரு அறையையே பாதியாகப் பிரித்து மேஜை போட்டிருந்தார்கள்.
படுக்கையிலேயே மலங்கழித்துவிட்ட ஒரு முதியவரைச் சுத்தம் செய்து, ‘டயாப்பர்’ மாற்றிக்கொண்டிருந்தார் செவிலியர் ஒருவர். வலி நிவாரணம் அளித்தும் தாங்க முடியாத வேதனையில் முணுமுணுத்துக்கொண்டிருந்தார் ஒருவர்.
102 வயதுப் பாட்டி ஒருவர், குறுகிப்போய் ஏழு வயதுப் பெண் குழந்தையைப் போல வாசலில் உட்கார்ந்திருந்தார். சேலையோ, நைட்டியோ அணிய மறுத்து, சிறு போர்வையை மட்டும் மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ”அவர் ஒரு குழந்தை சார். கண்ணுகூடச் சிரிக்கும். ‘அங்கே போ.. இங்கே போ.. டிரஸ் போடு’ என்றால் அவருக்குக் கோபம் வரும் சார். அதனால் நாங்கள் தொந்தரவு செய்வதில்லை” என்றார் ஊழியர் வினோத்.
மதுரை திருநகரைச் சேர்ந்த ஜனார்த்தனன், தொலைத்தொடர்புத் துறையில் உதவிப் பொதுமேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஜைலஜா. தங்களது சேமிப்புப் பணத்திலிருந்து மதுரை விளாச்சேரியில் 27.5 சென்ட் இடம் வாங்கி வைத்திருந்தார்கள். வயதாகிவிட்ட சூழலில், நல்ல நோக்கமுள்ள வேறு யாரிடமாவது இதனை ஒப்படைத்துவிடலாம் என்று நினைத்த இவர்கள், இந்த மையத்தைப் பற்றி கேள்விபட்டு நிலத்தை ஒப்படைத்ததுடன், தங்கள் செலவிலேயே பத்திரமும் பதிவுசெய்து கொடுத்திருக்கிறார்கள்.
இப்போது அதில் கட்டிடம் கட்டும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்கள், நம் தன்னலமற்ற டாக்டர்கள்.
இவர்களின் இணைய முகவரி: http://aishwaryamtrust.org/

ஆத்மாக்களின் திருப்தியே மணிகண்டனின் ஆத்மதிருப்தி

Thanks - எல்.முருகராஜ் (Dinamalar)

Image may contain: one or more people and outdoor

ஆத்மாக்களின் திருப்தியே மணிகண்டனின் ஆத்மதிருப்தி

மதுரையில் உள்ள பெரும்பாலான முதியோர் இல்லங்களில் உள்ள அறிவிப்பு பலகையில் அவசரத்திற்கும் ஆலோசனைக்கும் கூப்பிட வேண்டிய பெயர் மற்றும் போன் எண் பட்டியில் தவறாமல் ஒரு எண் இடம் பெற்றிருக்கும்.
அந்த பெயருக்கும் எண்ணுக்கும் சொந்தக்காரர்தான் மணிகண்டன்.
யார் இந்த மணிகண்டன்.
மதுரை எஸ்எஸ் காலனியில் வசிப்பவர் அப்பா இல்லை அம்மா தனலட்சுமி மட்டும்தான். அம்மாவை பிரிந்துதான் சந்தோஷம் என்றால் அது வேண்டாம் என்பதற்க்காக வேறு ஊருக்கு மாற்றலாக மறுத்து உயர்பதவியை விட்டவர்.
இப்போதும் முதியோர் இல்லத்தில் இருந்து யார் எப்போது கூப்பிட்டாலும் போய்விடுவேன், போய்விட்டு வந்து என் வேலையை முழுமையாக செய்துவிடுவேன், என் நிலமை தெரிந்து வேலை கொடுத்தால் பார்க்கிறேன் என்று சொன்னவர்.இவரது இந்த வார்த்தைக்கு பின் இருக்கும் மனித நேயத்தை பார்த்துவிட்டு ஏவிஎன் ஆரோக்யா ஆயுர்வேத மருத்துவமனை இயக்குனரின் செயலர் பணியினை வழங்கியுள்ளனர்.
யாருமற்ற நிலையில் அனாதை பிணம் என்று ஓன்று கூட மதுரையில் புதைக்கக்கூடாது என்பதற்காக அரும்பாடுபட்டு வருபவர்.இதானல் ஆதரவற்ற பிணத்தை யார் பார்த்தாலும் 'கூப்பிடு மணிகண்டனை' என்று சொல்லுமளவிற்கு பிரபலமாகியிருப்பவர்.
எய்ட்ஸ்,டி.பி.,போன்ற நோய்களால் இறந்தவர்களின் உடலின் ஆத்மா கூட சலனப்பட்டு சாந்தி அடையக்கூடாது என்பதற்க்காக அப்படிப்பட்ட பிணங்களையும் இழுத்து போட்டு மகன் நிலையில் இருந்து அடக்கம் செய்யக்கூடியவர்.
உறவோ நட்போ இல்லை மணிகண்டன் நீங்கதான் பார்க்கணும் என்று போன் செய்து சொல்லிவிட்டால் போதும் உடனே வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு மாலை மரியாதையுடன் இறந்தவரின் பிள்ளையாக மாறி இடுகாட்டில் தனி ஒருவனாக இருந்து இறுதி சடங்குகளை செய்துவிடுவார்.இறந்தவருக்கு மறுநாள் செய்யவேண்டிய பால் ஊற்றுதல் போன்ற சடங்கையும், அமாவசை போன்ற நாட்களில் செய்யும் சடங்குகளையும் கூட மறாவாமல் செய்துவிடுவர்.
இதுவரை எத்தனை பேரின் உடலுக்கு இப்படி ஒரு பிள்ளையாக இருந்து சேவை செய்தோம் என்ற கணக்கு எல்லாம் எடுத்து வைத்தக்கொள்ளவில்லை, இதற்காக யாரிடமும் பணமும் கேட்பதும் இல்லை, இது போன்ற காரியத்திற்கு செய்வது புண்ணியம் குறைந்த பட்சமாக கோடித்துணியாவது வாங்கிக்கொள்ளுங்கள், ஆம்புலன்சு செலவையாவது ஏற்றுக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினால் அதைத் தடுப்பதும் இல்லை.
ஆதரவில்லாத பிணங்களுக்கு ஆதரவாக இருந்து இறுதி சடங்குகள் செய்வது ஆயிரம் கோவில்களுக்கு போவதை விட பெரிய புண்ணியம் என்று மகா பெரியவர் சொல்லியிருக்கிறார்.அந்த வார்த்தையை மந்திரமாக ஏற்றுக்கொண்டு இறந்தவர்களின் ஆத்மா திருப்தியடைய நான் செய்யும் இந்த செயலால் எனக்கு ஆத்மதிருப்தி கிடைக்கிறது அது போதும் என்பவர்.
என் வருமானத்தில் எங்களுக்கான குறைந்தபட்ச தேவை போக இதற்கு செலவழிக்க எப்போதுமே குறையோ தடையோ இருந்தது இல்லை, என்ன ஒரு வருத்தம் என்றால் எவ்வளவோ சம்பாதித்த கொடுத்த தாய் தந்தையை கடைசியாக பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் விடக்கூட நேரமும் மனமும் இல்லாத சமூகமாக மாறிவருகிறதே நம் சமூகம் என்பதுதான் என் கவலை என்கிறார்.
வருடத்திற்கு நான்கு முறை காளவாசல் ஐயப்பன் கோவிலில் பெரிய அளவில் அன்னதானம் நடத்தி முதயோர் இல்லங்களில் உள்ள அனைவருக்கும் வடை பாயசத்துடன் சாப்பாடு வழங்கவும்,சபரிமலை ஐயப்பன் கோவில் போக ஆசைப்படுபவர்களை செலவு செய்து அனுப்பிவைப்பதும்,படிப்பு உள்ளீட்ட உதவி தேவைப்படுபவர்களையும், உதவி செய்பவர்களையும் இணைப்பவராகவும் இன்னும் இது போன்ற நல்ல பல சமூக காரியங்களால் இவரது ஒவ்வொரு நாளும் இவருக்கு இனிய நாளாக மாறிப்போகிறது.
'எல்லாத்தகுதியும் இருந்தாலும் இந்த பிணத்திற்கு உறவாக இருக்கும் வேலை செய்யறதால உனக்கு பெண் கொடுக்க தயங்குறாங்கப்பா' என்று உறவுகள் சொல்லும் போது, 'இது வேலையில்லை சமூக கடமை என்னை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் பெண் வரட்டும் காத்திருக்கிறேன்' என்று உண்மை சொல்லி மணப்பெண்ணிற்காக காத்திருப்பவர்.
கும்பகோணத்து பாட்டிய நேத்ராவதியில் சேர்த்துடலாம்,தத்தநேரி சுடுகாட்டில் ஹரிட்ட சொல்லி குழி தோண்டச் சொல்லுங்க,கிழமாசிவீதி அன்னதானத்திற்கு வடையைக் கொண்டு போய்க் கொடுங்க,கடச்சேனந்தல் தாத்தாவை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துடுங்க என்ற ரீதியில் அடுத்தடுத்த போன் கால்களில் பிசியாக இருந்த மணிகண்டன் நிச்சயமாக மதுரையின் மணிமகுடத்தில் ஜொலிக்கும் வைரக்கல்தான்.
மணிகண்டனுடன் பேசுவதற்க்கான எண்:9244317137
நன்றி:தினமலர்.காம்/நிஜக்கதை
கூடுதல் படங்களுக்கும் முந்தைய நிஜக்கதைகளை படிக்கவும் கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்,நன்றி!
http://www.dinamalar.com/news_detail.asp?id=1919925

Image may contain: 1 person, sitting
Image may contain: 2 people, people smiling, people standing