Saturday, January 17, 2015

தோழமையே இதனை உம்மிடம் யாசிக்கின்றேன்

தோழமையே இதனை உம்மிடம் யாசிக்கின்றேன் என குறை நினைக்க வேண்டாம்..இதனால் எம் தோழமையில் இருந்து விலகிடவும் வேண்டாம். இப் பள்ளிக் கட்டிட பணியானது ஒரு தவமாக கருதுகின்றேன்..வெற்றி பெறவும் மன்றாடுகின்றேன். உங்களால் முடிந்ததை உதவிட யாசிக்கின்றேன்.விருப்பம் என்றால் share செய்யவும்........

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் அருகே உள்ள துளுவபுஷ்பகிரி என்னும் கிராமம் வானம் பார்த்த பூமி. இக் கிராமத்தில் உள்ள பள்ளியானது (ஆஸ்பெஸ்டாஸ்) கல்நார் ஓட்டினால் ஆன கட்டடம் 1952 இல் தொட...ங்கப்பட்டது. தற்போது 62 ஆண்டுகள் கடந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் மழை வந்தால் வகுப்பறை குளம் , வெயில் அடித்தால் கல்நார் ஓட்டின் உஷ்ணம் தகிக்கும் . இவைகளையும் தாண்டி பள்ளிக் குழந்தைகள் தரமாக படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பள்ளிக்காக புதியக் கட்டடம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டபோது,, என் முயற்சியைக் கண்ட இக் கிராமப் பெரியவர் திரு.கோவிந்தசாமி ஆசிரியர்( ஓய்வு) அவர்கள் தன்னிடம் இருந்த 20 செண்ட் நிலத்தை தானமாக பள்ளிக்கு கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து சென்னை ரோட்டரி மைலாப்பூர் அப்டவுன் உதவியுடன் 2425 சதுர அடியில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்ட முயற்சிகள் எடுக்கப் பட்டு பள்ளிக் கட்டிடம் மேற்கூரை ( roofing ) வரை முடிந்துள்ளது..
உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு கல்வி பயிலும் ஏழை, நடுத்தட்டு குழந்தைகளுக்கும் மிகவும் பயனுள்ளாதாக அமையும் என்ற நோக்கில் வகுப்பறைகள் மட்டுமின்றி கணினி வசதியுடன் கூடிய ஒலி- ஒளி அமைப்புடன் கூடிய அறை அமைக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகிறது.
ஏழைகள் மட்டுமே அரசு பள்ளிகளில் படிக்கின்றனர் என்ற நிலை மாறி பணக்காரர்களும் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்று பள்ளியின் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிக்கப் படுகிறது எனக் கூறுவது மிகையாகாது..
இக்கிராமத்தை சுற்றியுள்ள ஏழு கிராமங்களில் 1500 க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப் பள்ளி கட்டி முடிக்கப் படும்போது 150 மாணவர்கள் மேல் பயன் பெறுவார்கள்.

மேற்கூரை வரை கட்டிமுடிக்கப் பட்ட நிலையில் ,மேலும் உள்கட்டமைப்பு , கழிவறை , பள்ளிச் சுற்றுசுவர் , மதிய உணவு சமையலறை போன்றவைகள் கட்டி முடிக்க 15 இலட்சம் வரை தேவைப் படுவதினால் உங்களால் இயன்ற அளவு எதுவாயினும் கொடையளித்து உதவிட பரிசீலியுங்கள்.

Thanks to Smt.Meena Rajan who is single handedly trying to build a school in a remote village. Please try to support the cause.

Checks can be made in the name of

SSA Aided Primary School,Thuluvapushpagiri
28/2,12th Avenue, vaigai Colony,Ashok Nager,
chennai-83
Email; dmeenarajan@gmail.com
The Bank Details Are;
State Bank Of India
Santhavasal Branch,
A/C .NO;32417332164
IFSC NO; SBIN0004879

credits :Smt.MeenaRajan on FB.

Friday, January 16, 2015

எங்களின் தேவை உங்களின் அன்புதான்...


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்


கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்...

நல்வினை தீவினை பயன்களை அனுபவிப்பதற்காக இந்த பிறவிச்சுழலில் சிக்குண்ட எங்களை மீட்கவல்லவன் நீயே... என்ற பொருள்படும் மேற்படி சிவபுராண பாடலை கண்ணில் நீர்மல்க குரல் நெகிழ நெஞ்சுருக பாடிக்கொண்டிருந்தவர்களின் கைகளில் பிடித்திருந்த சிவபுராண புத்தகங்கள் கைகளால் பிடிக்கமுடியாமல் நழுவி நழுவி கிழே விழுந்து கொண்டிருந்தது.

காரணம் அவர்கள் அனைவரும் கைவிரல்கள் சுருங்கி அல்லது மடங்கிப்போன நிலையில் இருந்த தொழுநோய் மாற்றுத்திறனாளிகள்

அதென்ன தொழுநோய் மாற்றுத்திறனாளிகள் என்பவர்களுக்கு ஒரு சிறுவிளக்கம்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான சிகிச்சை எடுத்து அந்நோயிலிருந்து மீண்டுவந்தவர்களே தொழுநோய் மாற்றுத்திறனாளிகள்.

பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் கருணை காட்டப்படவேண்டியவையே என்ற சுவாமி விவேகானந்தரின் உரைக்கு ஏற்ப சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் கடந்த 12/01/15 ந்தேதி நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளன்று தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வு சிவபுரார பிரார்த்தனை பாடலுடன் துவங்கியது.

போலியோ பெரியம்மை போல தொழுநோயும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கடந்த காங்.அரசின் காலத்தில் வீண் ஜம்பத்திற்கு பெருமைக்காக பார்லிமெண்ட்டில் பேசியதை அடுத்து தொழுநோய் ஒழிப்பு திட்டம்தான் ஒழிந்து போனது.

உலகில் அதிக எண்ணிக்கையில் தொழுநோயாளிகள் வாழும் இந்தியாவிற்கு இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் மருந்து மாத்திரைகள் என்ற எல்லா உதவிகளும் நின்று போயின இங்குள்ள தொழுநோய் சிறப்பு மருத்துவமனைகளும் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருகின்றன

மற்ற நோய்கள் வந்தால் நோயாளிகளே மருத்துவரிடம் செல்வார்கள் ஆனால் இந்த நோயானது வந்து முற்றிய நிலையில்தான் நோயாளிகளுக்கே புரியும் ஆகவே மாநில அரசு இதற்கென தனிதுறையையும் அலுவலர்களையும் ஒதுக்கி வீடுவீடாகப்போய் தொழுநோய் ஒழிப்பில் அக்கறை காட்டியது ஆனால் இப்போது அந்த துறையையே ஒழித்து பொதுத்துறையில் சேர்த்துவிட்டது.இதன் ஊழியர்களும் டெங்கு சிக்கன்குனியா ஒழிப்பிற்கு மாறிவிட்டனர
மைக்கோ பேக்டீரிம் என்ற ஒருவித கிருமியால் பரவும் இந்த நோயானது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த யாருக்கு வேண்டுமானாலும் வரவாய்ப்பு உண்டு ஆனால் இயற்கையாகவே நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டு என்பதால் பத்தாயிரம் பேர்களில் ஒருவர்தான் இதனால் பாதிக்கப்படுவர்.

இப்படி பாதிக்கப்படுபவர்கள் அரசின் தவறான முடிவாலும் எங்கேயும் போய் சிகிச்சை பெறமுடியாமல் பெரும்பாலும் ரோட்டில் பிச்சை எடுத்துக்கொண்டு நாயிலும் கேவலமாக தெருப்பன்றியிலும் மோசமான சூழலில் உண்டு உறங்கி தங்கள் நாட்களை கழித்துவருகின்றனர்.
ஒரு காலத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்களாக இருந்து வீடுவீடாகப்போய் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியவரும் பின்னர் மடத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தன்னார்வ தொண்டராக பணியாற்றிவரும் ஆர். சிவா ராமகிருஷ்ண மடத்து தலைவராக இருந்த சுவாமி தபசியானந்தரிடம் இந்த பிரச்னையை கொண்டு சென்றபோது 'ராமகிருஷ்ணமடம் இவர்களை அரவணைக்கும், அன்பு செலுத்தும் இவர்கள் வாழ்க்கையை முன்னெடுக்கும்' என்று ஆணித்தரமாக சொல்லி அவர்களுக்கான கருணைக்கரங்களை நீட்டியவர் அவர
இதன் காரணமாக ராமகிருஷ்ண மடத்தில் இப்போது அவர்களுக்கு என்று தனி அரங்கம் உண்டு மாதத்தில் குறிப்பிட்ட தினத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அரங்கில் கூடுவார்கள்.அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் சிகிச்சைகள் தகுந்த மருத்துவரால் வழங்கப்படும்.

இந்த தொடர் சிகிச்சையின் மூலம் கிட்டத்தட்ட 1300 பேரை அந்நோயின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கோவிலின் வாசலில் பிச்சைக்காரர்களாக இருந்த பலர் இப்போது அதே கோவிலில் பித்தளை விளக்குகள் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.இரவு நேர செக்யூரிட்டியாக பணியாற்றுகிறார்கள், துணிவியாபாரம் செய்கிறார்கள்.


இவர்கள் இப்படி சுயமாக தன்னம்பிக்கையுடன் நிற்பதை பாராட்டும் வகையில் நடந்த அந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்ட பிஎச்இஎல் பொதுமேலாளர் ஜார்ஜ்சைமன் சுமார் மூன்றரை லட்சரூபாய்க்கு இவர்களுக்கு புத்தாடை எடுத்து கொடுத்திருந்தார்.தற்போதைய மடத்தின் தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் முன் இவர் பேசும்போது இவர்களது இந்த தேவையை சேவையாக செய்ய எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு இது என்றார்

தனியார் மருத்துவமனைகளும் அரசு மருத்துவமனைகளும் எங்களை விரட்டியடித்த போது அன்போடு கருணையோடு எங்களை அரவணைத்து எங்களை நோயின்பிடியில் இருந்து மீட்டது ராமகிருஷ்ணமடம்தான்.

நோயின் பிடியில் இருந்து மீண்டாலும் அந்த நோய் தந்ததழும்புகள் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும் இதனைப்பார்த்து எங்களை வெறுக்காமல் பொதுமக்கள் எங்களை நாகரீகமாக நடத்தவேண்டும் வீடு வாடகைக்கு தரவேண்டும் அள்ளிஎடுத்து அரவனைக்காவிட்டாலும் நாங்கள் உங்கள் பக்கம் வரும்போது விலகி ஒடி அவமானப்படுத்தாமல் துாரநின்றாவது கனிவாய் ஒரு புன்னகை செய்யுங்கள் எங்களுக்கு அது போதும் என்று தொழுநோய் மாற்றுத்திறனாளிகள் சார்பாக பேசியவர்கள் கண்கலங்க பேசினர் இல்லையில்லை வேண்டுகோள் விடுத்தனர்.
credits - dinamalar

Monday, January 12, 2015

3 days Special Temple Cleaning Services (15,16,17.01.2015-உழவாரம்) @Chidambaram

15,16,17.01.2015-உழவாரம்(Temple Cleaning Services)
கோயில் (Chidambaram)

முன்று நாள் சிறப்பு உழவாரம்(3days Special Temple Cleaning Services)
...
அன்னை சிவகாமசுந்தரி சமேத திருச்சிற்றம்பலமுடையார்ஆலயம்
(Annai Sivagamasundari sametha Koothaperumaan Aalayam)
உழவாரத்தில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் முன் கூட்டியே தொடர்பு கொள்ளவும்

 (Devotees who want to participate in temple cleaning services pls inform in Advance)
தங்குமிடம் குருஞானசம்பந்தர் மேல்நிலைபள்ளி

தொடர்பு:9842912767,9788111664
Cont:(9842912767,9788111664)

திருச்சிற்றம்பலம்.....

Friday, January 9, 2015

தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு! யார் இந்த மாமனிதர் ?! -Padmashri Awardee 2015


 
 
 
தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!...
யார் இந்த மாமனிதர் ?!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு
முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது  கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார்.

அப்படி என்ன செய்தார் ?!!
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில்  வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம்   வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன.   மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது  இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது  ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில்  மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று  சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில்
இறங்கி விட்டார் .

 1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட்  மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகைல்
'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும்
தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி  முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து  கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும்  மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட  பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு
200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற
மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக  இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து  எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை  பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின்  பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண்  பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !! இப்படி 2008 வருடம் வரை உலகில்  யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும்  பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.

 2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115  யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும்  அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி  சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை  சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

 காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது  யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. குடும்பம்:மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள்  சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார்.  வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை  பார்த்து கொள்கிறார்.

 டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை
நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு
கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!

இவரது தன்னலமற்ற பணி  இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும்,  அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக  அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
மரங்கள் மட்டும் அல்ல:தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦  ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும்  பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள்  விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை  நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு  வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.
இப்படி பட்ட ஒரு  மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து  கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான்   கூகுளில் பார்க்கவே முடிந்தது. மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு  பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும்
சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு   தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம்  கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை   கொடுப்போம். உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும்   இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு   காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு
மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை  மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும்  குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...

சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!

'மனிதருள் மாணிக்கம்' இவர்...!
இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் 
இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும்,  மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள்  விரும்பினால் தங்கள் தளங்களில் இவரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்

Thanks : Someone Post in FB

Thursday, January 8, 2015

கொற்கை (Korkai) - 11.01.2015-உழவாரம்(Temple Cleaning Services)

11.01.2015-உழவாரம்(Temple Cleaning Services)
கொற்கை (Korkai)

 பட்டிஸ்வரம் அருகில்(Near Pateeswaram)
கும்பகோணம்(Kumbakonam)
...
அருள்மிகு புஷ்பாம்பிகை சமேத பிரம்மபுரிஸ்வரர் ஆலயம்
(Arulmigu Puspaambigai sametha birammapureeswarar Aalayam)

உழவாரத்தில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் முன் கூட்டியே தொடர்பு கொள்ளவும்

(Devotees who want to participate in temple cleaning services pls inform in Advance)
தொடர்பு:9444151174,9444304980

 திருச்சிற்றம்பலம்.....

Monday, January 5, 2015

வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை... செல்வராஜ்

Thanks : Dinamalar

எப்பேர்ப்பட்ட மனிதர்களும் தன் வீட்டில் ஒரு இறப்பு ஏற்படும் போது சோகத்தாலும் அதிர்ச்சியாலும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப்போய்விடுவார்கள்.


அந்த நேரம் நண்பர்களும் உறவினர்களும் கூட தமக்கு தெரிந்ததை சொல்வார்களே தவிர சரியான விஷயத்தை,விவரத்தை சொல்லமாட்டார்கள்.


அந்த அந்திம நேரத்தை பயன்படுத்தி அடுத்தவர் வேதனையில் பணம் பார்க்கும் கூட்டமும் அதிகம்.





கொட்டகை போடுவது பார்பரை வரவழைப்பது பம்பைக்காரருக்கு சொல்லிவிடுவது சேர் ஏற்பாடு செய்வது ப்ரீசர்(இறந்தவர் உடலை பாதுகாத்து வைக்கும் பெட்டி) கொண்டுவருவது என்று இறந்த வீட்டில் செய்யவேண்டிய வேலைகள் எத்தனை எத்தனையோ இருக்கிறது.இது அத்தனைக்கும் தனித்தனியாக 'காசு' பார்ப்பவர்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள், காசு கொடுத்தாலும் சரியாக செய்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம்.


இறப்பு நடந்த வீட்டில் நடக்கும் இந்த நீண்ட நாள் வேதனைக்கு விடியல் ஏற்படுத்தி கொடுத்து கொண்டு இருப்பவர்தான் கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த செல்வராஜ்.


கோவை விளாங்குறிச்சியை சுற்றி உள்ள பத்து கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் யார் வீட்டில் இறப்பு ஏற்பட்டாலும் ஒரு போன் செய்தால் போதும் உடனே இறந்தவர் வீட்டிற்கு ப்ரீசர் போய்விடும், சிறிது நேரத்தில் பந்தல் கட்டப்பட்டு சேர் போடப்பட்டு ட்யூப் லைட் மாட்டப்பட்டு என்று அடுத்தடுத்து முதல் கட்ட வேலைகள் பார்க்கப்படும்.


பின்னர் இறந்தவர் உடலை ஈமக்கிரியை செய்யப்போகும் மயானத்திற்கு சொல்லிவிடுவது தேவைப்பட்டால் மருத்துவ சான்றிதழ் பெற்றுதருவது சடங்கு செய்ய தேவைப்படும் பம்பைக்காரர் முதல் டோபி வரை ஏற்பாடு செய்து தரப்படும்.


இவ்வளவும் செய்துதரும் மாற்றுத்திறனாளியான செல்வராஜ் இறந்தவர் வீட்டிற்கு போய் துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்வதுடன் கடைசியில் மயானம் வரை போய் தனது அஞ்சலியையும் செலுத்திவருகிறார்.


இந்த இறுதி காரியங்களுக்கு எப்படிப்பார்த்தாலும் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும், செலவு ஒரு பக்கம் என்பதைவிட யாரை எங்கே தேடுவது என்ற சிரமம் அதிகம்.


எந்தவித செலவும் வைக்காமல் எவ்வித சிரமமும் தராமல் முற்றிலும் இலவசமாக இந்த சேவையை செய்து தருகிறார் செல்வராஜ்.
யார் இந்த செல்வராஜ்.

முடங்கிகிடந்தால் சிலந்தியும் நம்மை சிறைப்பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் விலகி வழிகொடுக்கும்
என்ற கொள்கைக்கு சொந்தக்காரரான இவர் பார்க்காத தொழில் இல்லை செய்யாத வேலை இல்லை.

அரையனாவுக்கு(மூன்று காசு) சைக்கிளுக்கு காற்று அடித்து வயிற்றுப்பாட்டை பார்த்துக்கொள்ள ஆரம்பித்தவர் உறக்கம் மறந்து ஊன் துறந்து கடுமையான உழைத்ததன் காரணமாக இன்று நல்ல நிலையில் இருக்கிறார்.
நடுவில் நடந்த விபத்தில் முதுகுதண்டில் அடிபட்டதன் காரணமாக கழுத்துக்கு கீழ் செயல்பட முடியாத நிலைக்கு உள்ளானார்.எங்கேயாவது போவது என்றால் சேரில்வைத்துதான் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும்.ஆறுதல் சொல்லவந்தவர்கள் இவரால் பிரயோசனம் இல்லை இனி வாழ்நாள் முழுவதும் ஒரு ஒரமாக வைத்து கஞ்சி ஊத்துங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.இந்த வார்த்தையை கேட்டு மனதால் வீறு கொண்டு எழுந்த செல்வராஜ் அதன் பிறகு சம்பாதித்ததும் சாதித்ததும் நிறைய.இடது கையை மட்டும் உபயோகித்து போன் பேசமுடியும் தனது உடலில் நடக்கும் இந்த ஒரு நடவடிக்கையை வைத்தே தொழில் செய்து முன்னேறி தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் வேண்டிய அளவு சம்பாதித்தார்.
இனி சம்பாதித்தது போதும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது உபயோகமாக செய்து கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்த போத அக்கம் பக்கத்தில் இறப்பு நடந்த வீடுகளில் உள்ளவர்கள் செய்வதறியாத நிலையுடன் இருப்பதை பல இடங்களில் பார்த்தார்.அவர்கள் தேவை என்ன என்பதை உணர்ந்து அதை நாமே செய்தால் என்ன என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் யோசித்து செய்ய ஆரம்பித்த சேவைதான் இது.
தனது தந்தை கிருஷ்ணசாமி நினைவு அறக்கட்டளை சார்பாக செய்யப்படும் இந்த சேவைக்கு தேவைப்படும் டிரைவர்கள் முதல் பார்பர் வரை இவரே மாத சம்பளம் கொடுத்து வீட்டில் வைத்திருக்கிறார். இது தவிர ப்ரீசர் நாற்காலி பந்தல் வேன் என்று வீட்டையே பாதி கிட்டங்கியாக்கியும் வைத்துள்ளார்.
ஜாதி மதம் மொழி இனம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் ஏழை பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் இந்த சேவை உண்டு. முற்றிலும் இலவசம் என்றாலும் இறந்த வீட்டை சேர்ந்தவர்கள் அவர்களாகவே முன்வந்து கொடுக்கும் பணத்தை அறக்கட்டளை சார்பாக வாங்கிக்கொள்கிறார் அது நூறு ரூபாயாக இருந்தாலும் சரி பத்தாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி.
எனது முழு நேரமும் இப்போது இதுதான் என் வேலை. இந்த சேவைக்கு மணைவி சாவித்ரி மற்றும் மகன் கவுதம் ஆகியோர் பெரிதும் உதவியாக இருக்கின்றனர்.என் சக்திக்கு உள்பட்டு பத்து கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் இதை செய்து தருகிறேன் ஆனால் இன்னும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சேவை போய்ச்சேரவேண்டும். கோவை என்று மட்டும் இல்லை இந்த தொண்டு எல்லா ஊர்களிலும் கிடைக்கவேண்டும் என்பதே என் கனவு என்று சொல்லி நெகிழ்கிறார்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ளவர் நீங்கள் என்றால் இந்த இருபத்து நான்கு மணி நேர இலவச சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:7373726363,7373756363.தன்னம்பிக்கையின் சின்னம் சமூக சிந்தனையாளர் உழைப்பின் இலக்கணம் மாற்றுத்திறனாளிகளின் முன்னோடியான செல்வராஜ் செய்யும் இந்த தொண்டு சிறக்க வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்:9994499933.